×

நெருங்கும் மக்களவைத் தேர்தல் : வாக்குச் சீட்டை பயன்படுத்தி தேர்தலை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு!!

டெல்லி : அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபாடில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணகோரிய வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ள நிலையில், வாக்குச் சீட்டை பயன்படுத்தி தேர்தலை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்த விவிபாட் இயந்திரங்களை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. தற்போதைய நடைமுறைப்படி, வாக்கு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 விவிபாட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே ராண்டம் முறையில் எண்ணப்படுகிறது. இந்த நிலையில் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபாடில் பதிவாகும் வாக்குகளை எண்ண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை கடந்த 2ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அது குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த நிலையில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு, நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரசாந்த் பூஷன் ஆகியோர் 21 மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளதால் அதற்கு முன்பே வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது அடுத்த வாரத்தில் திங்கள், புதன் கிழமைகளில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வருகிறது என்றும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகியவை விடுமுறை நாட்களாக இருப்பதால் விரிவான விசாரணைக்கு செவ்வாய் கிழமை மட்டுமே இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். இதனால் இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

வாக்குச் சீட்டை பயன்படுத்தி தேர்தலை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு

இதனிடையே மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டை பயன்படுத்தி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வழக்கறிஞர் பிரச்சா தாக்கல் செய்துள்ள மனுவில், “வாக்குச் சீட்டு மற்றும் வாக்குப் பெட்டிகளைப் பயன்படுத்திதான் தேர்தலை நடத்த வேண்டும் என்பது “விதி”. எனவே உள்ளாட்சித் தேர்தல்கள் உள்பட அனைத்துத் தேர்தல்களையும் வாக்குச் சீட்டை பயன்படுத்தி தான் நடத்த வேண்டும். விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி வாக்குச் சீட்டுக்குப் பதிலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விவிபேடில் பதிவாகும் வாக்குகள் முழுவதையும் எண்ணக் கோரும் வழக்குடன் இந்த வழக்கும் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.

The post நெருங்கும் மக்களவைத் தேர்தல் : வாக்குச் சீட்டை பயன்படுத்தி தேர்தலை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...